தினசரி நாளிதழ்களைப் புரட்டப்புரட்ட பற்றி எரிகின்றன. பச்சிளங்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த செய்தியில் ஆரம்பித்து, நாற்பதைக்கடந்த பேராசிரியை கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொட்டு ஒவ்வொன்றிலும் நெருப்பை அள்ளி கொட்டுகிறது பெண்கள் மீதான வன்முறை! மூன்று நொடிகளுக்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். 69 பேரில் ஒருவர் மட்டுமே தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மகனாக, ஒரு பெண்ணுக்கு கணவனாக இருக்கும் எனக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு பெண்ணுக்கு அப்பானாகும் போது அந்த இதயத்துடிப்பு நின்று விடக்கூடாது என்பதிற்காக இதைப் பகிர்கிறேன்.
“பொண்ணுங்களுக்குத் தான் மச்சான் காலம்!” என்று கல்லூரிப்பையன்கள் முதல் பெரியவர்கள் பலரே கூட ஒருமுகமான பெண்களின் வளர்ச்சியை மட்டுந்தான் பார்க்கிறார்கள்!
பெப்சி கம்பெனியின் முதன்மை மேலாளர் இந்திரா நூயியையும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தியையும் தெரிந்தவர்களுக்கு பீச்சில் பிச்சையெடுக்கும் சிறுமிகளையோ, தமிழக கிராமப்புறப்பள்ளிகளில் கழிவறைக் கழுவும் அருந்ததியினர் இனப் பெண்பிள்ளைகளையோ, காதல் குழப்பத்தில் உயிரை தொலைத்த, ஆசிட் வீச்சில் முகத்தை தொலைத்த, இளம்பெண்களையோ, தன்னுடைய தவறு எதுவுமே இல்லாத பொழுதும் கணவனால் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் அப்பாவிக் குடும்பப் பெண்களையோ, கும்பல் கும்பலாய் தோல் காட்டி, உடல் விற்றுப்பிழைக்கும் கல்கத்தா சோனா கச்-மும்பை சிவப்பு விளக்கு-பெங்களூரு மசாஜ் கிளப் பெண்களையோ, நம் கல்லூரி மச்சான்களுக்கும் கலாச்சார குகையில் இருந்து வெளி வராத ‘பெரியவர்’களுக்கும் தெரிவதே இல்லை.
இங்குள்ள அத்தனைப் பெண்களுக்கும், கல்வியும், பொருளாதார மேம்பாடும் தான் பிரச்சினையா என்றால், இல்லை.
இந்தியாவின் தலைநகரான புது தில்லியிலிருந்து, குக்கிராமம் வரை எல்லாவித வன்முறைக்கும் ஆளாகும் பெண்களில் படித்துக் கொண்டிருப்பவர்கள், படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள், பழுத்த அறிஞர்கள் என்று அனைவருமே அடக்கம்.
கிராமக்குடிசையில் வன்முறையை அனுபவித்தப் பெண் இப்போது பள்ளிக்கும் வேலைக்கும் போகும் வழியிலும், பள்ளியிலும் வேலை பார்க்கும் இடத்திலும் அதே வன்முறையை நாசூக்காகவும் அப்பட்டமாகவும் அனுபவித்து வருகிறாள்.
இந்த வன்முறையைச்செய்யும் ஆண்களும் கல்வியறிவு இல்லாதவர்கள் கிடையாது. சொந்தத்துறையில் வேலை செய்யும் பணியாளரை வன்முறை செய்யும் மேலதிகாரி இருக்கிறார். பி.பி.ஓ.வில் வேலை பார்க்கும் பட்டதாரி இருக்கிறார். காவல்துறை அதிகாரி இருக்கிறார்.
ஆன்மீகச் சித்தாந்தத்தில் திளைத்த, காவித்துணி போர்த்திய பன்றிகள் இருக்கிறார்கள். (பன்றிவிரும்பிகள் மன்னிக்கவும்). நாக்கூர்மையை வைத்து வணிகம் செய்யும் அரசியல் பெருச்சாளிகள் இருக்கின்றனர்.
மொத்தத்தில் பெண் கொடுமைகளுக்கு கல்வியறிவின்மை காரணம் இல்லை. பெண்களின் நம்பிக்கையின்மையும் ஆண்களின் அதிகாரப்போக்கும் மட்டுமே பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு அடிக்கோலிடுகின்றன. இரு பாலாருக்குமே கிடைத்திருக்க வேண்டிய பாலினக்கல்வி கிடைக்கவில்லை.
படித்த பெண்களில் பலர், பாவம், ‘அழகு’ என்ற அழுக்கு போர்வைக்குள் தான் முடங்கிக் கிடக்கின்றனர். உண்மையான அழகு அறிவு, திறன், குணம், எண்ணம் ஆகியவற்றில் தான் இருக்கிறது என்பதை அவர்களுக்கு தெரியாமலேயே வளர்க்கிறது கலாச்சாரமும், இன்றைய சினிமாவும், பத்திரிக்கைகளும்!
பெண் விடுதலைக்கு போராடிய தலைவர்களின் உழைப்பு இன்று, ஜூவல்லரி வியாபாரிகளுக்கும், முகப்பூச்சு நிறுவனங்களுக்கும் ‘ஃபேஷன் ஷோ’ செய்து பிழைப்பு நடத்தும் கோட்டு சூட்டு போட்ட திருட்டு கும்பலுக்கும் தான் உதவி இருக்கிறது. இவர்கள் தங்கள் பொருட்களை பயன்படுத்துவதே நம்பிக்கையின் அடையாளம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்.
‘குண்டு மல்லிகா! குட்டை கோமளா!” என்று கும்மாளம் போடுகிறது ‘விவல்’ சோப்பு விளம்பரம்! திரிஷா போன்ற மேனியைப் பெறுவதே அழகு என்றும் தன்னம்பிக்கை என்றும் கயிறு திரிக்கிறது!
குள்ளமான, உடல் பருமனான, கருப்பான பெண்கள் எல்லாம் இவைகளை பார்த்து ஏங்கித் திளைக்கிறார்கள். தாழ்வு மனப்பான்மையால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த விளம்பரங்களை சீரியல்களுக்கு இடையே பார்த்து பார்த்து வாங்கி ஏமாறுகிறது ஒரு கூட்டம். வாங்க முடியாத கூட்டம் பொறாமையில் மூழ்குகிறது.
இத்தனை வருடங்களாக பெண்களை துரு பிடித்த இரும்புக் கூண்டிலிருந்து தங்கக் கூண்டிற்கு மாற்றி இருக்கிறோமே தவிர அவர்களை விடுதலை செய்த பாடில்லை. அவர்களின் சிறகுகள் வளர உதவவே இல்லை.
சுய அறிதல் பற்றியும், உணர்ச்சிகளை கையாளுதல் பற்றியும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வித்தையை பற்றியும், பிரச்சினைக்குரியவர்களை திணறடிக்கும் உறுதியையும் பள்ளிக்கல்வியோ, பல்கலைக்கழகங்களோ தரவில்லை.
இவற்றை தருவதே பெண் விடுதலைக்கு போராடிய தலைவர்களின் உழைப்புக்கு செய்யும் மரியாதை ஆகும்.
பாரதி கண்ட கண்ணம்மா, குடும்பமோ சமூகமோ விரிக்கும் எந்த வலையிலும் மாட்டிக்கொள்ளாதவள். சிரித்தபடி அடிமைச்சங்கிலி இடும் சில்லறை வியாபாரங்களில் சிக்கிக்கொள்ளாதவள். அப்படிப்பட்ட கண்ணம்மாவை ஒவ்வொரு குழந்தையிடம் இருந்தும் தட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பள்ளிகள் அளிக்கும் கல்வியை மீறி இவர்களுக்கு வாழ்க்கையை வாழ வாழ்வியல் திறன்கள் தர வேண்டியிருக்கிறது.
சுதந்திரம் பெற்ற 63 ஆண்டுகளில் அரசும், அரசு சாரா நல்ல உள்ளங்களும் செய்திருக்க வேண்டிய இந்த பணிகளை நலந்தாவே அறக்கட்டளை செய்யவிருக்கிறது. உணர்ச்சிகளைக் கையாள, சுய விழிப்போடு நடை போட, தன்னம்பிக்கை பரிமளிக்கச்செய்ய, பாரதி கண்ட கண்ணம்மாவை வளர்த்தெடுக்க திட்டமிட்டு இருக்கிறது.
பாரதியின் பிறந்த நாளாகிய டிசம்பர் 11-ஆம் நாள் முதல் ‘கண்ணம்மா’ என்ற பெயரில் இத்திட்டம் இயங்கவிருக்கிறது.
வீதியில் உலவும், வறுமையில் வாடும், பெற்றோர் இன்றி தவிக்கும், இன்ன பல பாதிப்புகளில் தவிக்கும் பெண் குழந்தைகளின் வாழ்வு மேம்பாட்டுக்கு தரமான கல்வி, வாழ்வியல் திறன் பயிற்சிகள் ஆகியவற்றை கலை மற்றும் ஊடகம் மூலம் அளிக்கவிருக்கிறது.
எதிர்கொள்ளவிருக்கும் சவால் எத்தனை வலியது என்பதை உணர்ந்து உலகெங்குமுள்ள ஏராளமானோர் நிதியுதவி வழங்க உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து நிதியை பெற்றுத்தர 25 வீரர்-வீரங்கனையர் களத்தில் உள்ளனர்.
உங்கள் வீட்டுப் பெண் எங்கோ பிறந்து திரிவதாக எண்ணிக்கொள்ளுங்கள்! அவள் வாழ்க்கை சிறக்க, உங்கள் பிள்ளை போல் சிரிக்க, நிதி உதவி செய்யுங்கள்!
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு நாணயத்திற்கும், மெல்ல மெல்ல....... கண் திறக்கட்டும் பாரதியின் கண்ணம்மா!
வரவேற்பறையில் காத்திருக்கிறோம். www.nalandaway.org/kannama
வரவேற்பறையில் காத்திருக்கிறோம். www.nalandaway.org/kannama
கட்டுரையின் கடைசி வரிகளில்
ReplyDeleteபெண் பென் எடுத்து எழுதத் தூண்டும்
கட்டுரை துவங்கிய விதமோ அதனின் போக்கோ கண்டிப்பாக பாராட்டுக்குரியது. பெப்சி கம்பெனி மேலாளரை மேற்கோள் காட்டியாவுடன் 'பகீர்' என்று உணர்வை கிளப்பிய எனக்கு, அடுத்த சில வரிகளிலேயே இவர்களை மட்டுமே அறிந்த பலருக்கு சூடு போட்டது போல் தோன்ற வைத்ததிருக்கும் அம்சம் சிறப்புக்குரியது. சிறுபான்மையினத்தை சார்ந்த பெண்ணை சுட்டி காட்டியது மகிழ்ச்சி. ஆனால், இதை எல்லாம் சொல்லி ஏதோ நிறுவனத்திற்கு காசு கேட்பது கட்டுரை எழுதியவரையும் அந்த கட்டுரையும், "சீ! போ!" என்று தோன்ற வைத்து விட்டது.
ReplyDeleteஆனால், இதை எல்லாம் சொல்லி ஏதோ நிறுவனத்திற்கு காசு கேட்பது கட்டுரை எழுதியவரையும் அந்த கட்டுரையும், "சீ! போ!" என்று தோன்ற வைத்து விட்டது.
ReplyDeleteDecember 6, 2010 3:11 AM
ஏன்?
அதாவது சும்மா சொல்லிட்டு, ரசிசுட்டு, ஃபீல் பண்ணிட்டு ஓடி போயிரணும்....? ஆனா, இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு துணி மணி தங்க எடம் குடுக்கறத விட முக்கியமா என்ன விஷயங்கள் தேவை-னு யோசிச்சு அத குடுக்கணும்-னு முயற்சி எடுக்கற நிறுவனத்துக்கு ஆதரவு தெரிவிச்சா.. சீ! போ! சொல்ல தோணுதா? ஹ ஹ ஹா!
கட்டுரை எழுதின அய்யா,
- "பாரதி கண்ட கண்ணம்மா, குடும்ப
மோ சமூகமோ விரிக்கும் எந்த வலையிலும் மாட்டிக்கொள்ளாதவள். சிரித்தபடி அடிமைச்சங்கிலி இடும் சில்லறை வியாபாரங்களில் சிக்கிக்கொள்ளாதவள். அப்படிப்பட்ட கண்ணம்மாவை ஒவ்வொரு குழந்தையிடம் இருந்தும் தட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பள்ளிகள் அளிக்கும் கல்வியை மீறி இவர்களுக்கு வாழ்க்கையை வாழ வாழ்வியல் திறன்கள் தர வேண்டியிருக்கிறது."
- I should say these four lines are 'words of wisdom!' I don't know if this message could ve been communicated any better! esp. "சிரித்தபடி அடிமைச்சங்கிலி இடும் சில்லறை வியாபாரங்களில்
சிக்கிக்கொள்ளாதவள்." - This is how every girl of any age should be... we can't be expecting the world to come to our rescue at every moment... I commend the effort towards building 'The art of surviving any tough situation!' (in girl children)