Tuesday, November 9, 2010

பெரியாரும் ஆயுத பூஜையும்


சமீபத்திய செய்தி- மேட்டூர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட முற்பட்ட காவலர்களை பெரியார் திராவிட கழகத்தினர் தாக்கினர். இரண்டு நிலைகளிலிருந்து இச்செய்தியை பார்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஒன்று, காவல் நிலயத்தில் ஆயுத பூஜையை கொண்டாடலாமா என்பது. மற்றொன்று, காவலர்களை ஒரு கழகத்தினர் தாக்கியிருக்கலாமா என்பது.

காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்படலாமா?

ஆயுத பூஜை என்பது வழிவழியாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்து கொண்டிருக்கும் சடங்கு. அதிலும், இந்திய அரசு துறைகளில் பல இடங்களில், குறிப்பாக பி.ஜே.பி. ஆண்டு கொண்டிருக்கும் பல இடங்களில் விமரிசையாகவே, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் சடங்கு.

தனி நபர்களின் மத நம்பிக்கையை ஆணித்ரமாக ஆமோதிக்கும் இந்திய அரசின் போக்கு, அரசுத்துறைகளில் மத சடங்குகள் நடைபெறக்கூடாது என்னும் நிலையில் வலுவிழந்தே நிற்கிறது. புதிய சட்டமன்றத்திற்கு அடிக்கல் நாட்டுவதாயினும் சரி, பாலங்களை திறப்பதாயினும் சரி, பிராமணர்களின் சடங்குகளோடே ஆரம்பிக்கப்படுகின்றன!
இது மதசார்பற்ற நாடு. அரசியல் சட்டம் இவற்றைத் தடுக்கிறது என்கிற மேம்போக்கான வாதத்திற்கு அடியிலிருக்கும் உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மைனாரிட்டிகளாக வாழ்வோரின் மனநிலை மெஜாரிட்டிகளுக்கு புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் புரிந்து கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டும்.
நூறு மனிதர்களும் இரண்டு விலங்குகளும் ஊருக்குள் இருக்கும் போது அந்த விலங்குகளுக்கான பயம் விலங்குகளுக்கே தெரியும்! புரியும்! நூறு விலங்குகளும் இரண்டு மனிதர்களும் காட்டுக்குள் இருக்கும் போது அந்த மனிதர்களுக்கான பயம் மனிதர்களால் மட்டுமே உணர முடியும்!

இந்த ஊருக்குள் மனிதர்களாக வாழும் நாம் அனைவரும் நம்பிக்கையை வைத்தே வேறுபடுகிறோம். மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மைனாரிட்டிகளின் பய உணர்வை, தாழ்வு மனப்பான்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பெரிய விருந்தில் ஸ்பூனில் சாப்பிடும் மனிதர்களுக்கு இடையே கையில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய மனநிலை தான்.

ராணி விக்டோரியா ஒரு பெரிய விருந்து கொடுத்தாராம்.  ஆப்ரிக்கரும் பிரிட்டிஷாரும் கலந்து கொண்டனர். உணவு உண்ட அனைவருக்கும் கடைசியில் கைகழுவ ஃபிங்கர் பௌல் என்று சொல்லக்கூடிய தண்ணீர் குடுவை வழங்கப்பட்டது. ஒரு ஆப்பிரிக்க விருந்தாளி அதுவும் ஒரு வகை ரசம் என்றெண்ணி அதைப்பருக ஆரம்பித்து விட்டார். மேசையில் அமர்ந்திருந்த சிலருக்கு அதிர்ச்சி. சிலருக்கு சிரிப்பு. அதை கவனித்த ராணி விக்டோரியாவும் அந்த ஆப்ரிக்க நண்பருக்கு அசூயையாக இருந்துவிடக்கூடாது என்பதிற்காகவே அவரும் அந்த தண்ணீர் குடுவையிலுருந்த தண்ணீரை பருக ஆரம்பிக்க, ராணியே செய்துவிட்டார் என்று எல்லோரும் அதைப்பருக ஆரம்பித்து விட்டனர்.

சக மனிதர்களை எந்த நிலையிலும் புண்படுத்தி விடக்கூடாது என்பது பண்பாடு. நாகரீகம். சொல்லப்போனால், பண்டுகாலம் தொட்டு தமிழக, இந்திய மரபில் உள்ள பண்பாடு இதுவேயன்றி, நடுவே வந்த ஆயுத பூஜைகளோ இதர சடங்கு சம்பிரதாயங்களோ அல்ல.
மைனாரிட்டியாக வாழ்வோரின் மனநிலையை, பேச்சு, செயல், உடல்மொழி, பார்வை, எண்ணம், என்று எவ்விததிலும் புண்படுத்திவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தையும், பண்பாட்டையும் மனதில் வைத்தே நமது அரசியலமைப்பு சட்டத்தை வரிவாரியாக வார்த்தை வார்த்தையாக வடித்துள்ளனர் அம்பேத்கர் தலைமையில் அமைத்த குழுவினர்.
இந்துவல்லாத மற்ற நம்பிக்கை உடையவர்களுக்கு, தனக்கும் இங்குள்ள அரசு அலுவலங்களில் நியாயம் கிடைக்கும், பயன்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த சடங்குகள் குலைக்கும். ஜாங்கிட் போன்ற பெரிய காவல்துறை அதிகாரிகள் நவராத்திரி விழாவிற்கு தலைமை தாங்கும் பொழுது அந்த சுற்றுபுறத்தில் உள்ள இந்துக்கள்ளலாதவர்களுக்கு கிலி வரத்தான் செய்யும். என்றோ ஏற்படப் போகும் பூகம்பத்திற்கு அடிமனதில் ஏற்படும் சிறிய விரிசல் தான் அது.

அதற்காக சொந்த நம்பிக்கைகளை விட்டுவிடச்சொல்லி எந்த சட்டமும் சொல்லவில்லை. அவை இல்லங்களோடு நின்றுகொண்டு அலுவலகங்கள்  வரை வந்து விட வேண்டாம் என்பதே நிலை.

பெரியார் திராவிட கழகத்தினர், காவல் நிலையத்தை தாக்கியது சரியா?
வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்ற பெரியாரே யாரையும் தாக்கியதாக சரித்திரம் இல்லை. இன்றுள்ள பெரியோர்கள் எந்த சமூக கொள்கையையும் திணிப்பதாலோ வன்முறையாலோ வெற்றி பெறாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கருத்து நுழைவுகள், அமைதியாகவோ ஆர்ப்பாட்டமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ நிகழ்த்தக்கூடிய பாதிப்புகள் புண்படுத்துவதற்காகவே செய்யப்பட்டவை என்று பதியுமே தவிர அதிலுள்ள ஆழ்ந்த உண்மைகள் உணரப்படாமலே போய்விடும்.

மனமாற்றம் ஓரிரவில் நிகழக்கூடிய விஷயம் அல்ல. சரியான பழக்கமோ தவறான பழக்கமோ, மாற்றிக்கொள்ள அவகாசம் தேவைப்படுகிறது. கலகக்காரர்கள் பொறுமையுடன் கலக்க வேண்டும். அந்த பொறுமையை கோழைத்தனமாக நினைத்துக்கொள்ளக்கூடிய பெரியார் என்ற வெறும் பெயர் பிரியர்களும், மேம்போக்காக, கண்மூடித்தனமாக ஆன்மீகத்தையும் சடங்குகளையும் எதிர்ப்பவர்களும் தான் இன்று இருக்கிறார்கள். எந்த நிலையிலும் பழிக்கு பழி வாங்குவதையோ உடல் மற்றும் மனரீதியாக புண்படுத்துவதையோ பெரியார் பிரகடனம் செய்யவில்லை. பெரியார் தனக்குத்தோன்றிய கருத்துக்களை, வலுவான ஆதாரங்களோடும்,  ஆழமான சிந்தனையோடும், அசாத்திய துணிச்சலோடும் சொன்னாரே ஒழிய, அரசியல் காரணங்களுக்கு நாத்திகப்போர்வையை போர்த்திக்கொள்ளவில்லை. மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளைத்தாக்கினாரே ஒழிய மக்களைத் தாக்கவில்லை.

பெரியாரின் வழியாகத் தங்களைச்சொல்லி கொள்பவர்களுக்கு, மக்களை பகுத்தறிவுப்பாதையில் கைக்கோர்த்து இட்டுச்செல்லும் பொறுப்பு இன்று இருக்கிறது. அந்த பொறுப்பின் முதல் படி பொறுமை என்பதை கழகத்தினர் உணராமல் பகுத்தறிவு பகலவன் உதிக்க மாட்டான்.