எங்கள் வீட்டு ஜன்னலை ஏன் எட்டி பார்க்கிறீர்கள்?
" என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற?"- மு. மேத்தா அவர்களின் காதலைப்பற்றிய அற்புதமான வரி. என் கல்லூரிக்காலங்களில் மிகவும் ரசித்த வரி. என் உள்ளத்தின் ஓட்டத்தை என் அனுமதியின்றி படிக்கும் உரிமை காதலுக்கும் நட்புக்கும் தவிர வேறு எதிலுள்ளது? யாருக்குள்ளது?
மெத்தப் படித்தவர்களுக்கும் சினிமாவில் பிரசித்தி பெற்றவர்களுமாகிய இவர்களுக்கு உண்டு போலும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நிர்மலா பெரியசாமி மற்றும் நித்தியானந்தர்...
ஜீ தமிழிலில் 'சொல்வதெல்லாம் உண்மை', தந்தி டிவியில் 'நித்யதர்மம்', வசந்த் டிவியில் 'வாய்மையே வெல்லும்' என்று அடுத்தவீட்டு பிரச்சினைகளை அம்பலமாக்கும் இத்தரக்குறைவான நிகழ்ச்சிகளே இன்று TRP ரேட்டிங்கில் முன்நிலையில் உள்ளன.
முன்பு, நடிகை லட்சுமி 'கதையல்ல நிஜம்' என்று விஜய் டிவியில் ஆரம்பித்தார். பின்பு அவரின் தனிநபர் ஒழுக்கத்தை குறை கூறியதாலோ அல்லது வேறு காரணங்களாலோ அந்த நிகழ்ச்சி நின்று போனது. அந்த TRP ஏற்றத்தைக்கண்டு புழுங்கிய மற்ற சேனல்கள் அவர்களைவிட புகழ்ப் பெற்ற(?) மற்ற நட்சத்திரங்களை கொண்டு நிகழ்ச்சியை துவங்கிவிட்டனர்.
இவர்களுடைய தனிநபர் ஒழுக்கம் பற்றி ஆராய்வது என்னுடைய வேலையல்ல என்பதாலும், அப்படிச்செய்வதின் மூலம் இவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போகும் என்பதாலும், இந்தக் கட்டுரையின் கோணம் கீழ்வருமாறே அமைகிறது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் 04.10.2013ல் வந்த வழக்கு ஒன்று:
ஒரு பெண் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகி, அதற்கு ஒருவனைக் காரணம் காட்டி அந்தப்பெண்ணும், அவள் தாயும், அவள் அண்ணனும், வந்து உட்கார்ந்து இருக்கிறார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இளைஞனும் அமர்ந்திருந்தான்.
நடுவில் சக்கரவர்த்தி இருக்கையில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இருதரப்பினரையும் கேள்விகள் கேட்டு விசாரணை செய்கிறார். விசாரணைக்கு இடையே இருதரப்பினரும் ஒருவரையொருவர் குறைசொல்லி ஒரு கட்டத்தில் கைகலப்பாகிவிட, கேமராவுக்கு பின்னிருந்து இருவர் வந்து தடுத்துவிடுகிறார்கள்.
என்னுடைய கேள்வியெல்லாம்,இவைதாம்.
1. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றோரிடம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உண்மையை வரவழைக்க முயற்சி செய்கிறாரா? அப்படியென்றால் இவர் போலீசா? இவருக்கு அதற்கான அதிகாரங்கள் இருக்கின்றனவா?
2. இரு தரப்பையும் தீர விசாரித்து இவர் தீர்ப்பு வழங்குகிறாரா? அப்படி வழங்குவது என்றால் இவர் சட்டங்கள் படித்து, வழக்குரைஞராக பயிற்சி பெற்று, நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரா?
3. பாதிக்கப்பட்டவருக்கும், பாதிப்பை எற்படுத்தியவருக்கும் 'கவுன்செலிங்' தர முற்படுகிறாரா? அப்படியென்றால் 'கவுன்செலிங்' எனும் உளவியல் ரீதியான கல்வியும் பயிற்சியும் இவருக்கு இருக்கிறதா?
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தவிர நிர்மலா பெரியசாமி மற்றும் நித்தியானந்தரிடமும் இந்தக்கேள்விகளை முன்வைக்கிறேன்.
இவர்கள் எவரும் போலீஸாகவோ, நீதிபதியாகவோ,முறையான கவுன்செலிங் பயிற்சியோ இல்லாமல், எங்கள் காதலராகவோ, நண்பராகவோ இல்லாமல் எந்த தகுதிகளோடு எங்கள் வீட்டு ஜன்னல்களை எட்டிப்பார்க்கிறீர்கள்?
மற்றுமொரு முக்கியமான சிந்தனை, ஏன் உங்களின் எந்த நிகழ்ச்சியிலும், நடுத்தர மக்களோ, உங்களை போன்று பட்டுப்புடைவை அல்லது துறவற வஸ்த்திரமோ போட்டவர்கள் வருவதில்லை? குடிசைவாசிகளும், தினக்கூலிகளும் மட்டும் ஏன் வருகிறார்கள்? இவர்கள் வீட்டில் மட்டும் தான் பிரச்சினைகள் இருக்கிறதா?
நித்தியானந்தர் தனக்கும் தன்னுடைய பெண் 'சீடரு'க்கும் சமீபத்தில் ஏற்பட்ட சிக்கல்களை
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முன்னிலையிலோ நிர்மலா பெரியசாமி முன்னிலையிலோ தீர்த்துக்கொள்ளத்தயாரா? லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அல்லது நிர்மலா பெரியசாமி வீட்டுப்பெண்களில் யாரேனும் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளானால் நேராக அழைத்துக்கொண்டு நித்தியானந்தர் முன்னிலையில் நித்தியதர்மம் பெறுவீர்களா?
காவல்துறை விசாரணையாக இருந்தாலும் சரி. 'கவுன்செலிங்' ஆக இருந்தாலும் சரி. 'Confidentiality' என்கிற ரகசியத்தை பாதுகாக்கும் தன்மை முக்கியம் என்று உங்களில் யாரும் ஏன் உணரவில்லை?
உங்கள் வீட்டு ஜன்னலுக்கெல்லாம் 'வின்டோ ஏசி'யை வைத்து அடைத்துக்கொண்டு அடுத்தவர் ஜன்னலுக்குள் உங்கள் காமிராக்கள் வெட்கமின்றி நுழைவதும், அதில் நீங்கள் பிரதான நடுவராக அமர்வதற்கும் கூச்சமாக இல்லை?
இருதரப்பினரிடமும் பணம் வாங்கிக்கொண்டு, ஒட்டுப்போட்ட நியாயம் பேசி பிரச்சினையை முடித்துவைக்கும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கும், சேனல்கள் தரும் காசுக்காகவும், மக்களிடம் 'விவரசிகாமணி' என்ற பட்டத்தைப் பெறுவதற்காகவும் நீங்கள் நடத்தும் இந்த மட்டப்பஞ்சாயத்துகளுக்கும் என்ன வித்தியாசம்?
இக்கட்டுரையை எழுத என்னை தூண்டியதே 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் வந்த அந்த கர்ப்பமுற்ற பெண்ணின் உறவுக்கார பெண்மணி தான். பணி நிமித்தமாக நான் சந்திக்க நேரிடும் போது எதிரே இருந்த டிவியில் ஓடிய இந்த நிகழ்ச்சியை பார்த்து அவர் புலம்பியது இது தான்:
'' ரொம்ப அசிங்கமாயிடுச்சுங்க! அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கும்! இல்லனா அவங்க அண்ணனே அந்த பொண்ண கொன்னுடுவான்!''
என் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை! அந்த பெண்ணுக்கு உயிர் போனால் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்குழுவோ திருமதி. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களோ பொறுப்பேற்க தயாரா? அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை வளரும் போது இந்த சமூகத்தால் ஏற்படும் மன உளைச்சலை சீர் செய்ய உங்களில் யாராவது தயாரா?
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் பெண்ணின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ வெளியிடக்கூடாது என்கிற கண்ணியத்தை பல ஊடகங்கள் பின்பற்றுகின்றன. உளவியல் பற்றிய படத்தை இயக்கிய திருமதி. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி இந்த சிறு லாஜிக் கூட எட்டாமல் போனது?பாதிக்கப்பட்டவரை வைத்து எப்படி ஒரு மணி நேரம் அலுக்காமல் வீடியோ செய்கிறீர்கள்?
ஒரு பக்கம், 'ஆரோகணம்' போன்ற தரமான சப்ஜெக்ட்டை தன் படத்திற்கு தேர்வு செய்துகொண்டு, மற்றொரு பக்கம் இந்த கட்டப்பஞ்சாயத்து கூத்துக்களை நடத்துவது ஆனந்த விகடன் நடத்தும் அதே குழுமம் 'டைம்பாஸ்' நடத்துவது போலல்லவா உள்ளது?
உண்மையிலேயே பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் எண்ணம் இருந்தால் உங்கள் வீட்டு முற்றத்திலோ, மொட்டைமாடியிலோ செய்யலாமே! விளம்பரங்கள் பல பெற்று ஏன் ஒரு தொடர் முட்டாள்தனத்தை அரங்கேற்றுகிறீர்கள்? அனாதை பிணத்தருகே உட்கார்ந்து பிச்சை எடுப்பது அல்லவா இந்த காரியம்?
நடந்தவை நடந்தவையாக இருக்க, இனி நடக்கவேண்டியவற்றை சிந்தியுங்கள்! உங்கள் வீட்டு ரகசியங்களை போல் மற்றவர் வீட்டு ரகசியங்களும் பொக்கிஷமானவை என்று கருதத் துவங்குங்கள்!
உங்கள் புகழுக்கெல்லாம் குறைவில்லை. மேலும் வேண்டுமெனில், நிகழ்ச்சிக்கான தரமான ஐடியாக்கள் நிறைய கொட்டிக்கிடக்கின்றன. மேற்கத்திய சேனல்களை பார்த்து நிகழ்ச்சிகளை உருவாக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
மேற்படியும் இந்த நிகழ்ச்சிகள் தொடரவேண்டும் என்று ஆசை பட்டால், இந்த கட்டுரையை யாருமற்ற தனி இடத்தில் நீங்களும் உங்கள் மனசாட்சியும் மட்டும் இருந்து மீண்டும் படிக்கவும். அதற்கு மேலும் தொடர முனைந்தால், உங்கள் 'வின்டோ ஏசி'யை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அவற்றை உடைத்துக்கொண்டு இதே சேனல்களின் காமிராக்கள் என்றாவது ஒரு நாள் உங்கள் வீட்டு ஜன்னலையும் எட்டிப்பார்க்கும்.
