Saturday, January 29, 2011

அம்மி குத்த இளையராஜா எதற்கு?


அன்புள்ள இசைஞானிக்கு,

தண்ணீருக்கு அடுத்தபடியாய் அதிகம் பருகியது உங்கள் இசையைத்தான். என்னை வளர்த்தெடுத்ததில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதாலேயே உங்களுக்கு இந்த உரிமை கடிதம்.

இளையராஜா என்ற சிற்பிக்கும் மலபார் கோல்ட் என்ற அம்மிக்கும் என்ன சம்பந்தம்? பணத்தையும் புகழையும் ஈட்டிவிட்ட இசை தெய்வத்திற்கு இத்தனை நாள் கழித்து என்ன நேர்ந்தது? வெறும் நகைக்கடைக்கா தாங்கள் அம்பாசிடர் ஆக வேண்டும்?

வெறும் உலோகங்களுக்கா உங்கள் புகழை விற்பது? பிராண்ட் அம்பாசிடராக, நேற்று வந்த காளாண்கள் எல்லாம், எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு தங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.
பல வார்த்தக விளம்பரங்களில் தோன்றும் திரிஷா, PETA என்கிற தெரு நாய்களை தத்தெடுக்கும் சங்கத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் காசநோய்க்கு பிராண்ட் அம்பாசிடராகி, அதற்கான ஆல்பங்களை தயார் செய்து அதில் வந்த பணத்தைக் கூட காசநோய் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு வழங்கியுள்ளார்.

உங்கள் நண்பர் கமலஹாசன் கூட எச்.ஐ.வி. விழிப்புணர்விலும் ஹிருதய ராகம் என்ற திட்டத்தின் மூலம் 125 குழந்தைகளுக்கு இதய சிகிச்சை அளிப்பதற்கான விளம்பரங்களிலும் தோற்றமளிக்கிறார்.

இந்தி நடிகர் விவேக் ஒப்ராய், புற்றுநோய்க்கான விழிப்புணர்வில் தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளார். 

“நான் பயன்படுத்தாத பொருளுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் என்ற அஜீத் போன்ற இளையவரின் முதிர்ச்சி கூடவா எங்கள் இசைஞானிக்கு இல்லாமல் போனது?

 “மலபார் கோல்ட்” வுடன் உள்ள உங்களுடைய ஆர்வம், என்னவென்று அறிந்து கொள்ள இணையதளத்தினை சற்று தட்டிப்பார்க்கும் போது நீங்கள் பேசிய உரையை கேட்க நேர்ந்தது. சிறுவயதில் வறுமையில் வாடிய போது, உங்களுடைய சகோதரியார் உங்கள் மேற்படிப்புக்காக தாலியை விற்று, கொடுத்ததாகவும், ஏழைகளுக்கு என்றாவது ஒரு நாள் அவசரத்திற்கு தங்களிடம் உள்ள தங்க நகை தேவைப்படும் என்றும் அதனால் தான் இந்த விளம்பரத்தில் தோன்றுவதாகவும் பிதற்றியிருக்கிறீர்கள்.

தமக்கையின் தங்கத்தாலியை விற்று நீங்கள் முன்னேறியதற்காக உங்கள் உழைப்பு தங்கத்திற்கு பயன்பட வேண்டியதில்லை. மாறாக வறுமை ஒழிப்புக்கு பயன்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பிறந்து வளர்ந்த தலித் சமுதாயம் மேம்பட எங்காவது உங்கள் உழைப்பு பயன்பட்டிருந்தால், உங்கள் இசை வரலாற்றில் இருப்பது போல் நீங்களும் வரலாற்றில் இடம் பிடித்திருப்பீர்கள். 

அழுத்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தின் பின்னணியில் இருந்து பொங்கி வந்த இசை வெள்ளம் நீங்கள். இதயத்தை வருடிய அந்த இசை உங்கள் சமூகத்தையும் கூடவே முன்னிலைக்கு அழைத்துக் கொண்டு வரவேண்டாமா?

இன்று பிராண்ட் அம்பாசிடர் ஆவதற்கு பிரச்சனைகளா இல்லை? தமிழகத்தில் மட்டும் “ Muscular Dystrophy” எனப்படும், தசை சம்பந்தப்பட்ட நோயால் 50,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கணிப்புகள் உள்ளன. கைகள் செயல் இழந்து கால்கள் செயல் இழந்து பிறகு கண்களைக்கூட இமைக்க முடியாமல், இறுதியில் இறப்பைத் தழுவும் இளைஞர்கள் இருக்கிறார்கள். தேவையான நீதி இருந்தால் அவர்களுக்கான இடமும், மருத்துவ வசதிகளையும் செய்து தர முடியும்

பிள்ளைகளால் கைவிடப்பட்டு தெருவில் திரியும் உங்களை போன்ற எத்தனையோ முதியவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு படுத்து உறங்க ஒரு பாயும் தலையணையும், மட்டுமிருந்தால் கூட போதும். இறுதி நாட்களை கொஞ்சம் நிம்மதியாய் கழிப்பர்.

வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு, உயிர் பிழைத்து இன்று பிச்சைப் பாத்திரங்களை ஏந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் அகதி முகாம்களிலும் படங்களிலும் காலத்தை கழிக்கிறார்கள். சிறிதளவே பணம் இருப்பினும் தொலைபேசியில் பேசி தங்கள் உறவுகள் செத்தார்களா? 
இருக்கிறார்களா என்றாவது தெரிந்து கொள்ள முடியும்.

“Cerebral Palsy” யென்னும் மூளைக்கோளாறினால் அவதிப்படும் ஏழைப் பிள்ளைகளுக்கும், நிலமும் நீரும் பழி வாங்கிய விவசாயிகளுக்கும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கும், கல்வி வாசனையே அண்டாத குக்கிராமத்துச் சிறுமிகளுக்கும் இன்று பணம் வெவ்வேறு விதத்தில் தேவைப்படுகிறது. 

உங்கள் முகத்தை காட்டினாலே லட்ச லட்சமாய் கொட்டத் தயாராய் கோடானு கோடி பேர் இருக்கும் போது நீங்கள் முகத்தை காட்ட வேண்டியது இந்த சமூக பிரச்சனைகளுக்கா? அல்லது இந்தியாவிலும் அரபு நாடுகளிலும் கொள்ளைகொள்ளையாக பணம் சம்பாதித்து வரும் மலபார் கோல்டுக்கா?

உள்ளாடை விளம்பரத்தில் இருந்து உதட்டுச்சாய விளம்பரம் வரை எத்தனையோ சினிமாக்காரர்கள் பல்லிளித்துக்கொண்டு வரும்போது உங்களிடம் மட்டும் இந்த கோரிக்கையை வைப்பதற்கு ஒரு காரணம், நீங்கள் கடந்து வந்த பாதை! நீங்கள் பிறந்த இடத்தில் இருந்து இன்று இருக்கும் நிலை வரையில் எத்தனையோ தேவைகளை உடைய வழிப்போக்கர்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு இந்த உலகம் தெரியும். தாலியை விற்று படிக்க வைத்த அக்காளை பற்றி பேசும் போதே கண்கலங்கும் நீங்கள் தாலியும் இல்லாமல், படிக்க பள்ளியும் இல்லாமல், உதவி செய்து முன்னேற்ற உறவும் இல்லாமல், திண்டாடி தெருவில் நிற்கும் வழிப்போக்கர்களை நிச்சயம் தெரிந்து இருப்பீர்கள்!

உங்கள் ஆதிசங்கரரும் ரமண மகரிஷியும் சொல்வதை போல், இதெல்லாம் அவரவர் விதி என்று நீங்கள் சொல்வீர்களானால் வரலாறு உங்களை பிழையாகத்தான் பார்க்க போகிறது!

நீங்கள் பகவத் கீதையை படிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள்.
“எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.”
எடுத்தவற்றை எடுத்த இடத்தில் திருப்பிக்கொடுக்க விருப்பப்பட்டு மீண்டும் அவர்களுக்கே கொடுத்தீர்களானால் அதே வரலாறு நீங்கள் இன்றிருக்கும் பீடத்தை மேலும் பெரும்பீடமாய் ஆக்கி அங்கே அமர வைக்கவும் காத்திருக்கிறது. 

உங்கள் இசையால் நாங்கள் பேறு பெற்றோம். “இசைக்கு” மற்றுமொரு பொருளும் உண்டு! புகழ்! அந்த இசையாலும் எளியோர் நாங்கள் பேறு பெறுவோமாக!

அன்புடன்,
பிரம்மா.